பாஜகவின் தலையீட்டை விரும்பாத மக்களே டிடிவி தினகரனுக்கு ஆர்.கே நகரில் ஆதரவு அளித்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தலையீட்டை விரும்பாத மக்களே டிடிவி தினகரனுக்கு ஆர்.கே நகரில் ஆதரவு அளித்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாட்டில் நடைபெறுகிற பொதுத்தேர்தல்களாக இருந்தாலும், இடைத்தேர்தல்களாக இருந்தாலும் வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு அதிகமாகவே முன்வைக்கப்படுகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பது என்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் இருக்கிறது என்கிற கருத்து அதிகமாக முன் வைக்கப்படுகிறது. எந்த கட்சி வாக்குக்கு பணம் கொடுத்தாலும், அது கண்டிக்கத்தக்கதே. இந்த கட்சிதான் கொடுத்தது, அந்த கட்சி கொடுத்தது என்பதைத் தாண்டி தமிழக அரசியலில் இருக்கிற முக்கிய அரசியல் கட்சிகள் வாக்குக்கு கடந்த காலங்களில் பணம் கொடுத்ததாகவே குற்றம் சாட்டப்படுகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பது என்பது ஜனநாயகத்தின் மாண்பை குழிதோண்டி புதைக்கக்கூடியது. எனவே வாக்குக்கு பணம் கொடுப்பது என்கிற இந்த சீர்கேட்டை, ஜனநாயகத்தை அழிக்கக்கூடிய இந்த அழிவு சக்தியை, இல்லாமல் ஆக்க வேண்டிய பொறுப்பு, ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது, அதனுடைய தலைவர்களுக்கும் இருக்கிறது. எனவே வரும் காலங்களில் நடைபெறவிருக்கிற தேர்தல்களில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதை அனுமதிக்கக்கூடாது. நாம் சார்ந்திருக்கிற கட்சி பணம் கொடுக்காது என்கிற நிலையை உருவாக்குவதற்கு அனைத்து கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் முன்வர வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிளவுபட்டு நிற்கிற அ.இ.அ.தி.மு.க வில் யார் மக்களுடைய அங்கீகாரத்திற்குரியவர் என்பதே மிக முக்கியமான விவாதமாக மாறிப்போன காரணத்தினால் தி.மு.க இந்த தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டதாக நான் கருதுகிறேன். அ.தி.மு.க வை உடைக்க வேண்டும் என்கிற பா.ஜ.க வின் சூழ்ச்சிக்கு ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணியினர் உடன்பட்டு ஒத்துழைப்பு நல்குகிறார்கள் என்கிற எண்ணம் மக்களுக்கு வந்து விட்டது. எனவே அ.தி.மு.க வில் பா.ஜ.க வின் தலையீட்டை விரும்பாத மக்கள் தினகரனுக்கு பெருவாரியாக வாக்களித்து இருக்கிறார்கள். இதை புரிந்துகொண்டு பா.ஜ.க வோடு இருக்கிற உறவை அ.தி.மு.க வின் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் அணியினர் உடனடியாக துண்டித்து தமிழகத்தின் உரிமையை பாதுகாக்கக்கூடிய விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கிற நிலையில் தன்னை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதோடு, தினகரனோடு இணைந்து அ.தி.மு.க வை வலிமைப்படுத்துகிற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

பத்தாண்டுகள் சிறை தண்டனை கழிந்த ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு இந்த கோரிக்கையை தொடர்ந்து உதாசீனம் செய்து வருகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கிற ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிற சட்டமன்றத்தின் அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல், புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. கருணை அடிப்படையில் ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்வதற்கு பா.ஜ.க கடந்த காலங்களில் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது. ஆனால் நேற்றைய தினம் வாஜ்பாயின் பிறந்த தினத்தை முன்னிட்டு உத்திரப்பிரதேசத்தில் 93 ஆயுள் சிறை கைதிகளை உ.பி. பா.ஜ.க அரசு விடுதலை செய்திருக்கிறது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வருகிறோம். எனவே மத்திய பா.ஜ.க அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழகத்தில் இருக்கிற அனைத்து சமூகங்களை சேர்ந்த பத்தாண்டு காலம் தண்டனை பெற்ற ஆயுள் சிறை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். அதோடு சிறைக்கைதிகள் சமீர் மற்றும் SLE நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட அபுதாஹிர் ஆகியோரை  விடுதலை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த இரண்டு பேரின் விடுதலை குறித்து பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 6-01-2018 அன்று கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யக்கூடிய முஸ்லிம்களை தண்டிப்பதற்கான ஒரு மசோதாவை பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முத்தலாக் சொல்லி விட்டால் விவாகரத்து நடைபெறாது, அது சட்டத்திற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முத்தலாக் சொன்னவர்களை தண்டிக்கிற சட்டம் என்பது தேவையில்லாதது. மத்திய அரசின் முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருகிற முயற்சியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ஓகி புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் உடனடியாக கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கிற 20 லட்சம் ரூபாயினையும், காணாமல் போனவர்களையும் உயிரிழந்தவர்களாக கணக்கில் கொண்டு அவர்கள் குடும்பத்தினருக்கும் 20 லட்சம் ரூபாயினையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சேத மதிப்பீட்டை கணக்கிட்டு உடனடியாக அதற்குறிய நிவாரண தொகையினை வழங்க வேண்டும் என தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நெல்லை மாவட்டம் முழுவதும்  சாலைகள் போடப்பட்டு நீண்ட காலமான காரணத்தினாலும், மழையினாலும் மிகுந்த சேதமடைந்து இருக்கிற காரணத்தினால் மக்கள் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்துக் ண்டிருக்கிறார்கள். இது குறித்து பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளை சீர் செய்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், தமிழக அரசு அதற்கு ஆவண செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் அப்துல் ஹமீது, மாநில துணை தலைவர் நெல்லை முபாரக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜாபர் உஸ்மானி, அபுபக்கர் சித்திக், அபுதாஹிர், அஹமது நவவி, முஸ்தபா, ஃபாரூக், முஜீப் ரஹ்மான், மாவட்ட பொது செயலாளர் SSA.கனி ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.