63 வயது தந்தைக்கு 33 வயது மகள் கல்லீரல் தானம் . வடபழனி போர்டீஸ் மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சாதனை.

நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு  33 வயது இளைய மகள் கல்லீரல் தானம் .
சென்னை: 2022 மே 19 :   63 வயது மூத்த குடிமகன் சோர்வு , பசியின்மை , குமட்டல் உள்ளிட்ட கல்லீரல் பாதிப்பு நோய் அறிகுறிகளால் கடந்த பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்தார்.
மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சென்னை வடபழநி ஃபோர்டீஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தார்.  அவருக்கு நடைபெற்ற பல்வேறு பரிசோதனைகளில் கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis) கோளாறின் இறுதிக் கட்டத்தில் இருப்பது உறுதியானது.  ஃபோர்டீஸ் மருத்துவமனையின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ஸ்வாதி ராஜு அவரைப் பரிசோதித்து நோய்க்குறியைக் கண்டறிந்தார். பரிசோதனை அறிக்கையில் அவரது கல்லீரல் முற்றிலுமாகச் செயலிழந்து போனது தெரிய வந்தது. எனவே அவர் உயிர் பிழைக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே மாற்றுவழி எனப் பரிந்துரைக்கப்பட்டது.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகி , சுப்பிரமணியன் நோயாளியின் கடைசி மகளும், இரண்டு இளம் குழந்தைகளுக்குத் தாயுமானவரை முழுமையாகப் பரிசோதித்தார்.  முடிவாகக் கல்லீரல் தானத்துக்கான அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யவே சரியான நபராகத் தேர்வானார். கல்லீரல் தானம் அளித்தவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழுவினர் அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செய்முறையை விளக்கமாகப் புரிய வைத்தனர்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூத்த நிபுணர் டாக்டர் புனீத் தர்கன் கூறுகையில் ‘தந்தையாக சொந்த மகளின் ஒரு பகுதி கல்லீரலை  தானமாகப் பெறுவது அவருக்கு உணர்வுப்பூர்வமாக இருந்ததும் மற்றும் தனது மகள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயமும் இருந்ததால் கொஞ்சம் தயங்கினார். ஆனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்தும், கல்லீரல் குணமடைந்து மீண்டும் வளரும் என்று தெரிந்து கொண்ட பின்னர் ஒப்புக் கொண்டார்.  டாக்டர் விவேக் விஜ் தலைமையிலான வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவ நிபுணர்கள் குழு 8 மணி நேர கல்லீர மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். மயக்க மருந்தியல் & தீவிர சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் தனுஜா மல்லிக் தலைமையிலான பிரத்யேகக் கல்லீரல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு தானம் வழங்கியவரும், நோயாளியும், மாற்றப்பட்டனர்.
கல்லீரல் தானம் தந்த அந்த இளம் தாய் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற அடுத்த 5 நாள்களில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் 9ஆம் நாளில் வீடு திரும்பினார்.  இது குறித்து அவர் கூறுகையில் ‘கல்லீரல் தானம் வழங்குவது பற்றி நான் யோசிக்கவே இல்லை.  அவர் எனக்குத் தந்தை என்பதுடன் அவரது பேரக் குழந்தைகளுக்கு அவர் கட்டாயம் உயிரோடு இருக்க வேண்டும். இந்தச் சிகிச்சை முழுவதும் என் கணவர்தான் எனக்கு முக்கிய ஆதரவாக இருந்தார்; ஒவ்வொரு நொடியும் என்னுடன் இருந்தார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தந்தை குணமடைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு நடைபெற்ற முதல் அறுவை சிகிச்சை என்பதால் சற்று பதற்றமாக இருந்தேன். ஆனால் மருத்துவர்களுடனான விரிவான கலந்தாய்வுக்குப் பிறகு கல்லீரல் தானம் அளிக்க முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தேன்’ என்றார்
கல்லீரல் தானம் பெற்றவர் அடுத்த 6 நாள்களில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கும், 17ஆம் நாள் வீட்டிற்கும் திரும்பினார். இது பற்றி அவர் நெகிழ்வுடன் பேசுகையில் ‘நான் ஆசீர்வதிக்கப் பட்டவனைப்போல் உணர்கிறேன்.  எனது மகளுக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.  அவள் இல்லை என்றால் இன்றைக்கு நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆக்கப்பூர்வ சிந்தனையுடன் மிகச் சிறப்பாக என்னைக் கவனித்துக் கொண்டார்கள். கடந்த சில ஆண்டுகளாக இருந்ததை விடவும் இப்போது எனது ஆரோக்கியமும், வாழ்க்கைத் தரமும், கணிசமாக மேம்பட்டுள்ளது’ என்றார்.
வடபழநி, ஃபோர்டிஸ் மருத்துவமனை, ஜிஐ, ஹெச்பிபி மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் விவேக் விஜ் அறுவை சிகிச்சை குறித்து விரிவாகக் கூறுகையில் ‘இந்தியாவில் நடைபெறும் அதிக அளவிலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் கல்லீரல் இரண்டாம் இடமும், அதிக எண்ணிக்கையில் இறப்புகள் நிகழ்வதில் கல்லீரல் நோய்கள் பத்தாம் இடமும் வகிக்கின்றன. இருப்பினும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லாத காரணத்தால் உறுப்புகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.  உறுப்பு தானம் என்பது இறந்தவர்களின் உடலிலிருந்தே எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் நிலவுகிறது.  எனவே உயிருடன் இருக்கும் போதே ஒருவர் தனது கல்லீரலைத் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.   பெரும்பான்மை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் போது முழு உறுப்பும் மாற்றப்படும் என்றாலும், பகுதி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் அடிக்கடி நடைபெறுகின்றன. இந்தியாவில் நடைபெறும் 80% கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில், உயிருள்ளவர்களின், ஆரோக்கியமான 50% கல்லீரலை பயன்படுத்தியே நடைபெறுகிறது.  இருப்பினும் நோயாளியின் இரத்தப் பிரிவுடன் ஒத்துப் போவதுடன், சரியான அளவிலும் உள்ள கல்லீரலைக் கொண்டவரின் உறுப்பைத் தானம் அளிக்கச் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பதுதான் மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்தக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை நோயாளியின் நெருங்கிய உறவினரே தானம் அளிக்கச் சிறந்த நபர் என முடிவு செய்தோம். கல்லீரல் தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையில் உள்ள சிறப்பம்சம் கல்லீரலுக்கு மீள் உருவாக்கம் செய்து கொண்டு வளரும். தன்மை இருக்கிறது என்பதுதான்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp